பனையைவெட்டினால்....!!! #நதிகள்_வறண்டுபோகும்

 #பனையைவெட்டினால்....!!! #நதிகள்_வறண்டுபோகும்...!!!!


முன்னோர்களின் தொலைநோக்குசிந்தனை பற்றிய ஒரு அலசல்....!!




ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை..


 அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். 


இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.


 இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... 


இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். 


பனை மரம் தமிழ் நாட்டின் தேசிய மரமாகும். புல் வகையை சார்ந்த இம்மரம் தமிழ் நாட்டின் கடலோர பகுதிகளில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக காணப்படுகிறது.


 இலங்கையில், தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இம்மரம் ஏராளமாக காணப்படுகிறது. அடி முதல் முடிவரை இதன் எல்லா பாகங்களும் மனிதனுக்கு உதவுவதால், இதனை “கற்பகத்தரு” என அழைப்பர். இந்தியாவில் சுமார் 8 கோடி பனை மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 5 கோடி மரங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்கள் பெறப்படுகின்றன. பனையிலிருந்து பூம்பாளையைச் சீவி பெறப்படும் பதனீர் குளிர்பானமாக பயன்படுத்தப்படுகிறது. பதனீரை நுரைக்க வைத்தால் அது போதை தரும் கள்ளாக மாறுகிறது. பதனீரை காய்த்து கூழ்பதனீராக்கி அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. 


இளமையான பனங்காய் நொங்கு எனப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் நொங்கு, பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பனங்காய் முதிர்ந்து பனம்பழம் உண்டாகிறது. இனிப்பு சுவையுடைய பனம்பழம் தனியாகவும், சமைக்கப்பட்டும் உண்ணப்படுகிறது.


 பனங்கொட்டையை முழைக்கப் போட்டு அதிலிருந்து பனங்கிழங்கு மற்றும் தவுன் பெறப்படுகிறது. மேலும் பனையின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.


பனையின் தண்டு வீடு கட்ட உத்தரமாகவும், தூணாகவும் பயன்படுகிறது. பனையோலை வீட்டிற்கு கூரை வேய பயன்படுகிறது. இது தவிர பனையோலை பாய் முடையவும், ஓலைப்பெட்டிகள் செய்யவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுகிறது. 


பனை மட்டைகள் நார் தயாரிக்க பயன்படுகிறது. பனந்தும்பு கயிறு தயாரிக்க பயன் படுகிறது. இவை தவிர பனை மரங்கள் மழை தருவிக்கும் குடைகளாகவும் இருக்கின்றன.


முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.


 அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.


இந்து மற்றும் புத்த மதத்தில் பனைமரம் புனித மரமாக போற்றப்படுகிறது. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர் முதலிய சிவ தலங்களில் பனை மரம் தலமரமாக விழங்குகிறது.


பண்டைய தமிழ் இலக்கியத்தில் பனை மரங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. காதலில் தோல்வியுற்ற காளையர் மடலேறுதல் நிகழ்ச்சியில் பனை மட்டைகளை வைத்து குதிரை செய்து ஏறியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பழந்தமிழ் நூலான தலவிலாசம் பனைமரத்தின் 801 பயன்களை கூறுகிறது.


தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பனைமரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விழங்கியது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது அங்கிருந்து வெளியேறி தென் மாவட்டங்களில், தேரிக்காட்டில் வாழ்ந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இம்மரத்தையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்தனர்.


 இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வோடு கலந்து, ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பனைமரம் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது.


கள் இறக்கத் தடை, பனை பொருட்களை முறையாக சந்தை படுத்தாமை, பனையேற நவீன எளிய கருவிகள் இன்மை இவையே பனைமரங்கள் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப்பட காரணங்களாகும். பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இன்று அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர்.


 இதனால் குலவழியாக பனைகளை காத்துவருவது முற்றிலும் குறைந்துவிட்டது. பால் சுரந்து குடும்பத்தை காப்பாற்றும் பசுக்கள், பயன்பாடற்றவுடன் அடிமாடாக்கப்படுவதுபோல, வளாதார மரமான பனை மரங்கள் இன்று களை மரமாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.


தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் இன்று அருகிவரும் மரவகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டுள்ளன. 


இதே நிலை தொடருமானால் இன்னும் 40 வருடங்களில் பனைமரங்கள் முற்றிலுமாக தமிழகத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை அடுத்த தலைமுறைகள் படங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அவலம் நேரும்.


கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார். 


 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.  

இதுகுறித்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:  


உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 


முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது. 


கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான். 


அழிவிலிருந்து காப்பாற்ற பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு நல்லசாமி கூறியுள்ளார்.


தமிழர் அடையாளங்களில் ஒன்றான பனை மரத்தை அழிவிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். தமிழக அரசு பனைமரம் வெட்டுவதை உடனடியாக தடை செய்து புதிதாக ஏராளமாக பனை மரங்களை நடவு செய்ய வேண்டும். பனைமரத்திற்கு அதீத பராமரிப்போ, நீராதாரமோ தேவையில்லை. எனவே நடவு செய்தாலே போதும் அவை தானாகவே வளர்ந்து பெருகும். 


 மழைக்காலத்திற்கு முன் பனங்கொட்டைகளை சேகரித்து மழைக்காலத்தில் அவற்றை காடு, மேடுகளில் விதைக்க வேண்டும்.

 மேலும் பள்ளி மாணவர்களை இம் முயற்சியில் ஈடுபடுத்தினால் பெருமளவு பனை நடவு ஏற்படுவதோடு அவர்களுக்கு சுற்று சூழலை பற்றிய விழிப்புணர்சியும் ஏற்படும்......





Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி