வரலாற்றில்_இன்று
- Get link
- X
- Other Apps
#வரலாற்றில்_இன்று
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு நேற்று முதல் 66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 120 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை.
இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் அணையின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த பணி 1955-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பவானிசாகர் அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண்அணை என்ற பெருமை கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 32.8 டி.எம்.சி. கரையின் நீளம் சுமார் 8.78 கிலோமீட்டர். இதில் சேறு கழித்து 105 அடிக்கு அணையில் தண்ணீரை தேக்க முடியும். கீழ்பவானி பிரதானக்கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டராகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளைவாய்க்கால்களும், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன.
அணையில் மொத்தம் 19 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1953-ம் ஆண்டு அணையின் கட்டுமான பணி நடந்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். 1950-ம் ஆண்டுகளிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள எந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர். இதற்கு தேவையான எந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமானப்பணிக்கு சென்ற இப்பகுதியை சேர்ந்த வயதானவர்கள் கூறுகிறார்கள்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment